Monday, September 5, 2011

4. கூட்டு இயல்பான சேவை


4. கூட்டு இயல்பான சேவை

``கூட்டு இயல்பான சேவை அறியாமையை விரைந்து அகற்றுகின்றது’’
.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இயல்பான சேவையில் ஈடுபட்டு வாழும் வாழ்க்கையே சிறந்த நெறியான வாழ்க்கையாக அமைகிறது. அனைவரும் ஒருங்கிணைந்து சேவை செய்வதால் அதாவது கூட்டு இயல்பான சேவை செய்வதால் இந்தச் சமுதாயம் பெருமளவு மாறுதல் அடைகிறது.

ஆற்றுகின்ற சேவையின் அளவு முக்கியமல்ல; அதனுடைய பலன் மட்டும் முக்கியம். தனித்தனி சேவையைவிடக் கூட்டு சேவையில் பலமடங்கு ஆற்றல் உள்ளது. சேவையின் புனிதத்தை இதில் எளிதில் உணர முடியும். சிறந்த கூட்டு இயல்பான சேவை செய்வதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய். பிறருக்குக்; கூட்டு இயல்பான சேவை செய்வதன் மூலம் நீ ஆண்டவனுக்கே தொண்டு செய்தவனாகிறாய்.

இவ்வுலகில்தான் ஒற்றுமையுடன் கூட்டு இயல்பான சேவை செய்திட முடியும். மறு உலகம் இல்லை. இதன் உண்மையைப் புரிந்து செயல்படுத்த வேண்டும். கூட்டுச் சேவை செய்திட வேண்டுமே தவிர வாதப் பிரிதிவாதங்களுக்கு இங்கே இடமில்லை. ஆகவே வீண் தர்க்கத்தால் மனத்தைக் குழப்பிக் கொள்ளக்கூடாது. தன்னை அறிய வேண்டுமெனில் ஆசைகளை வெற்றி கொள்ளாமல் உள்ளத்தில் உண்மை பிரகாசிக்காது. கூட்டுச் சேவையில் இந்த இக இச்சைகள் ஒவ்வொரு கணமும் தானாக ஒடுங்கும். ஒரு நிஜமான அனுபவம் ஏற்படும். அப்போது கூட்டு இயல்பான சேவையில் தீர்வை நாம் காணமுடியும்.

நாம் உண்மையான கூட்டு இயல்பான சேவையால் தெளிவு அடைய முடிகிறது. நம் உண்மைப் பொருளே பரம்பொருள். அதுதான் உண்மையான இயல்பு. அது நமக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கிறது என்பதை உணர முடியும். கூட்டு இயல்பான சேவையில் வாழ்வோம், கூட்டு இயல்பான சேவை ஒன்றுதான் இன்ப நிலை. அது நம்மை ஒருங்கிணைத்து வழி நடத்திச் செல்லும்.

புல்லானாலும்கூட ஒன்று  சேர்த்துக் கயிறு ஆக்கினால் மதம் பிடித்த யானையையே அதனால் கட்டிவிட முடியும். அதுபோலக் கூட்டு இயல்பான சேவையில் அனைவரும் ஒன்றிணையும் போது உள்ளும், புறமும் பெரிய மாறுதலை ஏற்படுத்திவிட முடியும். நாம் அறநெறியுடன் ஒழுக முடியும். ஒழுக்கத்தோடு வாழ முடியும். கூட்டு இயல்பான சேவையில் புதிய சமுதாயத்தை அமையுங்கள்; வெறும் பேச்சால் அல்ல, புது அர்த்தங்களையும், ஊக்கமுள்ள, ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளையும் கற்பிக்க வேண்டும். பெயர், புகழ், பிறரை அடக்கியாளுதல் என்ற இந்த ஆசைகள் இல்லாமல் கூட்டு இயல்பான சேவை செய்வோம். காமம், பேராசை, கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவோம். அப்போது உண்மை நம்மை அடையும்.

கர்மாவிலேயே அழிந்துப்போய் விடாதீர்கள். கூட்டு இயல்பான சேவையில் வெகுவாகக் கர்மாவைக் குறைக்கலாம். கூட்டுச் சேவையில் இது கர்மயோகமாக மாறும். கூட்டு இயல்பான சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ள வனாக இரு; இதன்மூலம் தூய்மையும் பரிபூரணமும் உன்னை வந்தடையும்.

கூட்டு இயல்பான சேவையை வாழ்வின் தலையாய குறிக்கோளாகக் கொண்டு நம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இதன் அர்ப்பணிப்பில் ஈடுபாடும், மகிழ்ச்சியும், எத்தகைய தியாகங்களையும் செய்யக்கூடிய திறனும் இருப்பது கூட்டு இயல்பான சேவையின் வெற்றியை எடைபோடுகின்ற அளவுகோல்களாக அமையும். கூட்டு இயல்பான சேவை செய்பவனே நடமாடும் தெய்வம். இதில் தேர்ச்சி பெறுவதே வாழ்வின் மிகச்சிறந்த சாதனையாகும். அதற்குப்பின் நீ தனி மனிதனில்லை. உலகம் முழுவதும் உனக்கு சொந்தம். இந்த உலகம் முழுவதுமே என்றென்றும் அத்தகைய மனிதனை விட்டு விலகி நிற்காது. இயல்பான சேவை செய்வதற்கான அன்புள்ள உடம்பே உயிருள்ள உடம்பு. அன்பு இல்லாதவர்களின் உடம்பு வெறும் எலும்பைத் தோலால் போர்த்திய உயிரற்ற உடம்பாகும். இயல்பான சேவை செய்வது என்பது மன மகிழ்ச்சியை ஈட்டுத் தருகின்ற நல் வாய்ப்பு. அதுபோதும்; மாசுமறுவற்ற தூய்மையும் இறை உணர்வும் கை கோர்த்துக் கொண்டு களிநடம் புரியும்.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்த கூட்டு இயல்பான சேவையில் நமது இலக்கைப் பற்றிய விளக்கம் எளிதில் அனைவருக்கும் கிடைக்க வழிவகைச் செய்கிறது.

No comments:

Post a Comment