Monday, September 5, 2011

7. இயல்பான சேவையில் ஒன்றிய உள்ளானந்தம் தான்


7. இயல்பான சேவையில் ஒன்றிய உள்ளானந்தம் தான்

``இயல்பான சேவையின் உயர்ந்த நிலை வெளிப்பாடு உள்ளானந்தம்’’.

இயல்பான சேவை வாழ்க்கையுடன் இணைந்து வாழப்பட வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்தால், உள்முக யாத்திரைக்கு அது வழிக்காட்டும். வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம், அணுகுமுறை அனைத்தும் மாறும். பின் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்த நிறைவு நமக்கு ஏற்படும். இந்த நிறைவுதான் உள்ளானந்தம். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளானந்தம் அறிய முடியாமல் மறைக்கப்பட்டுள்ளது. வானத்தில் நட்சத்திரங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் நம் கண்ணுக்கு இரவில் மட்டும் தெரிகிறது; பகலில் மறைவதுபோல இருக்கிறது. ஆனால் அவை தோன்றுவதும் இல்லை; மறைவதும் இல்லை; அவ்வாறாக நமக்குக் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளானந்தம் உள்ளது. அது அறியப்படாமல் இருக்கிறது. நேர், எதிர் இரண்டினாலும் உந்தப்பட்டு நாம் காரியங்களைச் செய்துகொண்டே இருக்கிறோம். நாம் இவற்றிலிருந்து விடுபட்டு இயல்பான சேவை செய்தால் உள்ளானந்தத்தை அறிய முடியும்.

உள்ளானந்தத்தை உணருங்கள்; வெறும் பேச்சால் அல்ல. பெரியது எல்லாம் பெரியதாக உள்ள மெய்ப் பொருளின் ஒரு துகள்தான் எல்லா ஜீவராசிகளிலும் உள்ளது என்ற எண்ணம் இயல்பான சேவையில்தான் மிக எளிமையாகத் தெளிவாக அறிய முடியும். மற்ற எல்லா வழிகளும் கடினமானவைதான். இந்த இயல்பான சேவை முறையை எல்லா இதயங்களிலும் ஏற்படுத்தி அவற்றை நம் புதிய கோணத்தில் செயல்படுத்தும்போது அந்த இயல்பான சேவை புனிதத்தன்மை பெற்றுவிடும்.  அப்போதுதான் அவற்றின் உண்மையைப் புரிந்து உள்ளானந்தத்தை அறியமுடியும். இந்த ஆனந்தத்தை இயல்பான சேவையின் உண்மையைச் சிறு அளவாவது முதலில் அறிந்து கொள்ள வேண்டும். முதலில் அவற்றை விட்டு விடுகிறோம். பிறகு அவை தெய்வீகத் தன்மை பெற்று நம்மிடமே திரும்பி வருகின்றன. அப்போது உள்ளானந்தம் ஏற்படுகின்றது. அப்போது நம்முடைய துன்பம், துக்கம், நமது அற்ப சந்தோஷங்கள் எல்லாம் சிறிது சிறிதாக மறையும். இந்த உள்ளானந்தம் அடையும் காலம் அவரவர் கர்மத்திற்கு ஏற்ப வெளிப்படும். அதுவரை நாம் இயல்பான சேவை செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த உள்ளானந்தத்தைப் பேச்சாற்றல் மூலமோ, பரந்த அறிவின் மூலமோ, வேதங்களைப் படிப்பதன் மூலமாகவோகூட எளிதில் உணர முடியாது. ஆனால் இயல்பான சேவையில் எளிதில் உணர முடியும்.

இயல்பான சேவையால் மனம் பண்படத் தொடங்கும். இந்த இயல்பான சேவை பரம்பொருளின் சேவையாக ஆக வேண்டு மென்றால் உள்ளானந்தப் பரவசத்தோடு நீங்கள் செய்கின்ற இந்த இயல்பான சேவைப் பரம்பொருளுக்குச் செய்கின்ற சேவையாக ஆகிவிடும்.

இந்தப் புரிந்துணர்தலுடன் நீங்கள் சாந்தத்திற்குள் பிரவேசிப்பீர்கள். ஏனெனில் இது இயல்பான சேவையை ஒட்டிய உள்ளானந்தம். இதுவே மாற்றவியலாத களிப்பு; இதுவே கட்டுப்படுத்தப்படாத அறிவு; மாசுபடுத்தப்படாத ஞானம்; தீராத அன்பு மற்றும் பரிபுரண அமைதி எய்துதல் ஆகும்.

ஜீவராசிகளுக்கு உள்ளானந்தத்துடன் இயல்பான சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான். இயல்பான சேவையில் உள்ளானந்தம் அடைவதன் மூலம்தான் மெய்ஞ்ஞானம் அடைகின்றான். மெய்ஞ்ஞானம் அடையப் பெற்றவன் எப்போதும் மயக்க வயப்படுவதில்லை. இந்த நாகரீக வாழ்க்கையில் எல்லாவற்றையும் பகுத்தறிந்து அறிவாளிகள் மத்தியில் அறிவாளியாக, மேதைகள் மத்தியில் மேதாவியாக, துன்பமுறுபவரிடம் இரக்கமுள்ளவனாக, ஆனந்தத்தில் இருப்பவரின் சந்தோஷத்தில் மகிழ்பவனாக, மெய்ஞ்ஞானிகள் இடையில் மெய்ஞ்ஞானியாக, இளையோர் மத்தியில் இளைஞனாக, பேச்சாளர் அவையில் சிறந்த பேச்சாளராக, இல்லறத்தார் இடையே கடமையுள்ள இல்லறத்தானாக, துறவிகளிடையில் முற்றும் துறந்தவனாக இருக்கின்றான். எல்லாவற்றையும் வென்ற சிறந்த ஒருவனாகத் திகழ்கின்றான்.

இயல்பான சேவையில் உள்ளானந்தம் அடைவதன் மூலம் நமக்கு ஞானம் ஏற்பட்டு நிறைவாகப் பணியாற்றி இயல்பு நிலையை அடையலாம்.

No comments:

Post a Comment