Monday, September 5, 2011

7. இயல்பான சேவையில் ஒன்றிய உள்ளானந்தம் தான்


7. இயல்பான சேவையில் ஒன்றிய உள்ளானந்தம் தான்

``இயல்பான சேவையின் உயர்ந்த நிலை வெளிப்பாடு உள்ளானந்தம்’’.

இயல்பான சேவை வாழ்க்கையுடன் இணைந்து வாழப்பட வேண்டிய ஒன்று என்பதை உணர்ந்தால், உள்முக யாத்திரைக்கு அது வழிக்காட்டும். வாழ்க்கையைப் பற்றிய கண்ணோட்டம், அணுகுமுறை அனைத்தும் மாறும். பின் வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்ந்த நிறைவு நமக்கு ஏற்படும். இந்த நிறைவுதான் உள்ளானந்தம். ஒவ்வொரு மனிதனிடமும் உள்ளானந்தம் அறிய முடியாமல் மறைக்கப்பட்டுள்ளது. வானத்தில் நட்சத்திரங்கள் இருந்துகொண்டே இருக்கின்றன. ஆனால் நம் கண்ணுக்கு இரவில் மட்டும் தெரிகிறது; பகலில் மறைவதுபோல இருக்கிறது. ஆனால் அவை தோன்றுவதும் இல்லை; மறைவதும் இல்லை; அவ்வாறாக நமக்குக் காட்சியளிக்கின்றன. ஒவ்வொரு மனிதனிடத்திலும் உள்ளானந்தம் உள்ளது. அது அறியப்படாமல் இருக்கிறது. நேர், எதிர் இரண்டினாலும் உந்தப்பட்டு நாம் காரியங்களைச் செய்துகொண்டே இருக்கிறோம். நாம் இவற்றிலிருந்து விடுபட்டு இயல்பான சேவை செய்தால் உள்ளானந்தத்தை அறிய முடியும்.

உள்ளானந்தத்தை உணருங்கள்; வெறும் பேச்சால் அல்ல. பெரியது எல்லாம் பெரியதாக உள்ள மெய்ப் பொருளின் ஒரு துகள்தான் எல்லா ஜீவராசிகளிலும் உள்ளது என்ற எண்ணம் இயல்பான சேவையில்தான் மிக எளிமையாகத் தெளிவாக அறிய முடியும். மற்ற எல்லா வழிகளும் கடினமானவைதான். இந்த இயல்பான சேவை முறையை எல்லா இதயங்களிலும் ஏற்படுத்தி அவற்றை நம் புதிய கோணத்தில் செயல்படுத்தும்போது அந்த இயல்பான சேவை புனிதத்தன்மை பெற்றுவிடும்.  அப்போதுதான் அவற்றின் உண்மையைப் புரிந்து உள்ளானந்தத்தை அறியமுடியும். இந்த ஆனந்தத்தை இயல்பான சேவையின் உண்மையைச் சிறு அளவாவது முதலில் அறிந்து கொள்ள வேண்டும். முதலில் அவற்றை விட்டு விடுகிறோம். பிறகு அவை தெய்வீகத் தன்மை பெற்று நம்மிடமே திரும்பி வருகின்றன. அப்போது உள்ளானந்தம் ஏற்படுகின்றது. அப்போது நம்முடைய துன்பம், துக்கம், நமது அற்ப சந்தோஷங்கள் எல்லாம் சிறிது சிறிதாக மறையும். இந்த உள்ளானந்தம் அடையும் காலம் அவரவர் கர்மத்திற்கு ஏற்ப வெளிப்படும். அதுவரை நாம் இயல்பான சேவை செய்துகொண்டே இருக்க வேண்டும். இந்த உள்ளானந்தத்தைப் பேச்சாற்றல் மூலமோ, பரந்த அறிவின் மூலமோ, வேதங்களைப் படிப்பதன் மூலமாகவோகூட எளிதில் உணர முடியாது. ஆனால் இயல்பான சேவையில் எளிதில் உணர முடியும்.

இயல்பான சேவையால் மனம் பண்படத் தொடங்கும். இந்த இயல்பான சேவை பரம்பொருளின் சேவையாக ஆக வேண்டு மென்றால் உள்ளானந்தப் பரவசத்தோடு நீங்கள் செய்கின்ற இந்த இயல்பான சேவைப் பரம்பொருளுக்குச் செய்கின்ற சேவையாக ஆகிவிடும்.

இந்தப் புரிந்துணர்தலுடன் நீங்கள் சாந்தத்திற்குள் பிரவேசிப்பீர்கள். ஏனெனில் இது இயல்பான சேவையை ஒட்டிய உள்ளானந்தம். இதுவே மாற்றவியலாத களிப்பு; இதுவே கட்டுப்படுத்தப்படாத அறிவு; மாசுபடுத்தப்படாத ஞானம்; தீராத அன்பு மற்றும் பரிபுரண அமைதி எய்துதல் ஆகும்.

ஜீவராசிகளுக்கு உள்ளானந்தத்துடன் இயல்பான சேவை செய்பவன் உண்மையில் கடவுளுக்குச் சேவை செய்பவனாகிறான். இயல்பான சேவையில் உள்ளானந்தம் அடைவதன் மூலம்தான் மெய்ஞ்ஞானம் அடைகின்றான். மெய்ஞ்ஞானம் அடையப் பெற்றவன் எப்போதும் மயக்க வயப்படுவதில்லை. இந்த நாகரீக வாழ்க்கையில் எல்லாவற்றையும் பகுத்தறிந்து அறிவாளிகள் மத்தியில் அறிவாளியாக, மேதைகள் மத்தியில் மேதாவியாக, துன்பமுறுபவரிடம் இரக்கமுள்ளவனாக, ஆனந்தத்தில் இருப்பவரின் சந்தோஷத்தில் மகிழ்பவனாக, மெய்ஞ்ஞானிகள் இடையில் மெய்ஞ்ஞானியாக, இளையோர் மத்தியில் இளைஞனாக, பேச்சாளர் அவையில் சிறந்த பேச்சாளராக, இல்லறத்தார் இடையே கடமையுள்ள இல்லறத்தானாக, துறவிகளிடையில் முற்றும் துறந்தவனாக இருக்கின்றான். எல்லாவற்றையும் வென்ற சிறந்த ஒருவனாகத் திகழ்கின்றான்.

இயல்பான சேவையில் உள்ளானந்தம் அடைவதன் மூலம் நமக்கு ஞானம் ஏற்பட்டு நிறைவாகப் பணியாற்றி இயல்பு நிலையை அடையலாம்.

6. இயல்பான சேவை செய்யும் கலை


6. இயல்பான சேவை செய்யும் கலை

``இயல்பான சேவையை ஒரு கலையாக கற்பிக்கும் போது நம் அனைவராலும் இயல்பாக உருவாக்கப்பட்ட சிக்கலான இந்த உலகில் வாழ்வது எளிதாகிறது.

இயல்பான சேவை செய்து வாழ்வதே ஒரு சிறந்த கலையாகும். எல்லோருக்கும் முடிந்த அளவு சேவை செய்து நம்மைச் சுற்றிலும் வளத்தைப் பெருக்கிக் கொள்வதைவிடச் சிறந்த நுண்கலைவேறு எதுவுமே உலகில் இல்லை.

இந்த வளர்ந்த சமுதாயத்தில் சேவை பற்றிய கருத்துக்கள் தெரிந்தும்கூட, சரியான நடைமுறை வழி நடத்தப்பட இயலாத காரணத்தால் இதன் புனிதத்தைத் தொடர்ந்து அறியும் வாய்ப்புக் கிட்டுவதில்லை. எனவே வணிக இயல்பான சேவையை ஒரு கலையாகக் கொண்டு நடைமுறைப்படுத்திச் செயல்படும்போது, எல்லோருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றது; அன்பை வெளிப்படுத்துகின்றது. பகுத்தறிவை உண்டு பண்ணுகின்றது. இகப் புத்தியினைக் குறைக்கின்றது. வேற்றுமைகளைக் களைகின்றது. ஏற்றத் தாழ்வுகளை குறைக்கின்றது. அனைவருக்கும் நிறைவு நிலையை உண்டு பண்ணுகின்றது.

இயல்பான சேவையில் உள்ள உண்மைகளைத் தெளிவாக எடுத்துக் கூறவில்லை. போதிய அளவு விளக்கப்படவில்லை. போதிய அளவு அறியப்படவில்லை. நாம் அறிந்த அன்னதானம், பிச்சைக் காரர்களுக்கு உதவுவது போன்ற சிறுசிறு நிகழ்வுகளையே சேவை என்று எண்ணுகிறோம். அது சேவையின் முழுப் பலனையும் கொடுக்கவில்லை. எனவே இதைப் பற்றி முழுமையாக அறிய வேண்டுமானால் அதை ஒரு கலையாகவே நாம் கற்பிக்க வேண்டும். அப்போதுதான் இதன் புனிதத்தை அறிய முடியும்.

இயல்பான சேவையை அனுபவித்து உணர்ந்து நிறைவு அடைவதுதான் உயர்ந்த சிறந்த நிலையாகும். இந்த உயர்ந்த நிலைக்கு அனைவரையும் அழைத்துச் செல்லும் முறைதான் இயல்பான சேவை செய்யும் கலையாகும்.

இயல்பான சேவை செய்யுங்கள் அதோடு நல்லவனாக இருங்கள்.

இதுதான் சிறந்த கலையாகும். இந்த வாக்கியம் சாதாரணமாக இருந்தாலும் இதைத் தொடர்ந்து செய்தால் அநேக இரகசியங்களை எளிதில் அறிய முடியும். இதை ஒரு கலையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தும்போது படிப்படியாக உண்மை களை அறியச் செய்து இறுதியில் உங்களை முதிர்ந்த நிலைக்கு அழைத்துச் செல்லும்.

இயல்பான சேவை செய்யும் கலையில் நிறையப் பயன்கள் உள்ளன எனத் தெரிந்து வைத்துள்ளோம். இயல்பான சேவை செய்யும் கலையை முறையாக வரையறை செய்து, முறையாகச் செயல்படுத்த வேண்டும். இயல்பான சேவை செய்யும் கலை நம்முடைய வாழ்க்கையில் நாம் கற்றுக்கொண்ட மிகப்பெரிய பாடங்களில் ஒன்றாகும். இந்த ஒரு பாடத்திலிருந்து பல பெரிய பாடங்களை நாம் எப்போதும் கற்றுக் கொண்டு வந்திருக் கின்றோம்.

இயல்பான சேவையின் நுண்கலை என்பது அனைத்தையும் இறைவனின் படைப்பாகக் கருதுவதும், அன்பு செலுத்தும் மனோசக்தியை நாம் பெற்றிருப்பதும் இதன் சிறப்பாகும். அதனை நம் உள்ளங்களில் வளர்த்துப் பெருக்கிச் செழிப்பாக்க வேண்டும். இதனால் மட்டுமே உண்மையான விடுதலையைப் பெறமுடியும்.

இம்முறையில் ஆக்கப்பூர்மான ஆற்றலை விழிப்படையச் செய்து விரிவடைந்து பெருகிப் பரவச் செய்கின்றது. இந்த உயிர்த் துடிப்பான உள்முக ஆற்றலைத் தூண்டிப் பேரின்ப நிலைக்கு நம்மை அழைத்துச் செல்லுகின்றது. இயல்பான சேவையின் தொடக்கம், அளவற்ற வளர்ச்சியின் அனுபவம் அன்பின் முதிர்ச்சிக்கு நம்மை அழைத்துச் சென்று நமது வாழ்க்கையை முழுமையுறச் செய்கின்றது.

இதனை ஒவ்வொருவரும் நன்கு உணர்ந்து கொண்டு மன நிறைவுடன் அன்றாடம் செயல்பட வேண்டியது அவசியம். நம் கர்ம வினையைக் குறைக்க இயல்பான சேவை செய்கிறேன் என்ற உயரிய கொள்கையை மேற்கொண்டால் சீரிய வாழ்க்கை முறை உருவாகும். சேவை செய்யும் கலையால் பணியிலேயே நிறைவைக் காண முடியும்.

இயல்பான சேவையை அனுபவித்து தன்னை உணர்ந்து நிறைவு அடைவதுதான் உயர்ந்த சிறந்த கலையாகும்.

5. வணிக இயல்பான சேவை



5. வணிக இயல்பான சேவை

``வணிக இயல்பான சேவையால் சமுதாயத்தை சமநிலை அடையச் செய்து அகமும் புறமும் பெரும் மாறுதலை அடைய செய்யும்’’.

ஒரே சீராக தனக்காக மட்டுமே வாழும் வாழ்க்கையோடு, பிறருக்காகவும் செய்யும் செயல்களைத் துரிதப்படுத்தும் முறையே வணிக இயல்பான சேவையாகும்.

வணிகத்தையும் இயல்பான சேவையும் இணைவதே வணிக இயல்பான சேவையாகும். அதாவது வணிகத்தை ஒரு கருவியாகப் பயன்படுத்தி நாம் செய்யும் சேவை வணிக சேவை. வணிக மூலம் செய்யும் இயல்பான சேவை வணிக இயல்பான சேவை. இது ஒன்றே அனைவரின் வாழ்க்கையை வளமாக்கும். சரியான சிந்தனைகளும், திட்டங்களும் இல்லாத காரணத்தால் நாம் வணிகத்துடன் இயல்பான சேவை செய்வதன் உயர்வை அறிய முடியவில்லை.

சுதந்திரத்திற்கு முன் வணிகம் என்பது ஒரு தர்ம நெறிக்கு உட்பட்டு இருந்தது. இராஜாக்கள், ஆட்சி செய்யும் அதிகாரிகள் எல்லாம் தர்ம நெறிகளுக்குப் பயந்தார்கள்; கட்டுப்பாட்டுடன் நடந்தார்கள். அப்போது வணிகமும் கட்டுப்பாட்டுடன் நடை பெற்றுக் கொண்டு இருந்தது. வணிகம், கல்வி, மருத்துவம், ஆட்சி முறைகள் எல்லாம் புனிதமாகக் கருதப்பட்டன. காலமாற்றத்தாலும், அறிவு மாற்றத்தாலும், ஆட்சி மாற்றத்தாலும் இதன் புனிதத் தன்மை சிறிது சிறிதாக மாற்றம் அடைந்து முழுவதும் வியாபாரமாக மாறிவிட்டது. இவற்றைத் திரும்பவும் புனிதப்படுத்துவது காலத்தின் கட்டாயமாக உள்ளது. இவற்றைப் பழையப்படி புனிதப் படுத்த நாம் அனைவரும் ஒன்றுகூடிச் செயல்பட வேண்டியது அவசியமாகிறது. இவற்றைப் புனிதப்படுத்தும் வழிகளில் வணிக இயல்பான சேவை ஒன்றாகின்றது. இந்த வழி மற்ற வழிகளைக் காட்டிலும் சிறந்த வழியாகின்றது. சுலபமான வழியாகின்றது. புனிதமான வழியாகின்றது.

இது ஒரு வரையறுக்கப்பட்ட இயல்பான சேவையுடன் கூடிய வணிகமாகும். இதன் செயல்திறன் காலத்திற்கு ஏற்றவாறு வரையறுக்கப்படுகின்றது. இது உயர்ந்த தரமுடையதாகவும் சிறந்த பயன்களை அளிக்கக் கூடியதாகவும் மற்றும் உயரிய தொழில் நுட்பமுடையதாகவும் இருக்கும் வகையில் அளிக்கின்ற இயல்பான சேவையில் கனிவும் பண்பும் வாடிக்கையாளர்களுக்கு மன நிறைவு தரக்கூடியதுமாக இருக்கும். பொருள்களின் விலைகளில் நியாயம் இருக்கும். வாங்கும் பொருள்கள் அவர்கள் கொடுக்கும் பணத்திற்கு உரிய மதிப்பு உடையதாக இருக்கும். வணிக இயல்பான சேவையின் புது அர்த்தங்களையும் ஊக்கமுள்ள ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளையும் கற்பிக்க வேண்டும். முடிந்த அளவு வணிக இயல்பான சேவை செய்வது என்பது ஆளுமைத் தன்மையின் உயரிய உயர்ந்த வெளிப்பாடாகும். இதனால் வாடிக்கையாளர்கள் நிறைவையும், தெய்வீக மகிழ்ச்சியையும் பெறுகின்றனர்.

கூட்டு இயல்பான சேவையின் புனிதத்தைக் கூட்டு வணிகத்தில் உணர முடியும். மக்கள் அனைவரையும் ஆன்மீகச் சமுதாயச் சூழலுக்குள் கொண்டு வந்து, அவர்களிடம் நிறைந்துள்ள ஆற்றலை வெளிப்படுத்திச் சமுதாயத்திற்குக் கூட்டு இயல்பான சேவை செய்வதன் மூலம் உலகில் ஆரோக்கியமான தெய்வீகச் சூழலை உருவாக்கலாம். இதனால் ஆன்மீகப் பயிற்சி, விழிப்புணர்ச்சி, அறிவு, பரிவுணர்ச்சி, செயலில் நேர்மை ஆகியவற்றை உருவாக்க முடியும். இதன்மூலம் உயரிய பண்பாட்டுக்குத் தலைவணங்கிச் சமுதாயம் தொடர்பான பணிகளில் ஈடுபடுகின்ற விழிப்புணர்வினை உண்டாக்க முடியும்.

வணிக இயல்பான சேவையில் மட்டுமே மக்களுக்கு முழுமையான சேவையினை எளிதில் செய்திட முடியும். மக்களுக்கு உணவு அளிப்பது, மருந்து அளிப்பது, கல்வி கற்பிப்பது, சமுதாயத்தின் ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது, மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது போன்றவற்றை ஏற்படுத்த முடியும். இதனால் ஒவ்வொரு மனிதரிடத்திலும் இருக்கும் சக்தியை வெளிப்படுத்தி எல்லோரும் ஒன்றுகூடி நிறைவாக வாழ வழிவகை செய்கிறது. கூட்டு வாணிகத்தின் பன்முகச் சேவை காலத்தின் கட்டாயம். எனவே வணிக இயல்பான சேவையைச் சிறப்பாகச் செய்ய நாம் அனைவரும் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.

வணிக இயல்பான சேவையில் மக்களிடம் விழிப்பை ஏற்படுத்தி, சீரிய சமுதாயத்தை அமையச் செய்கிறது.


4. கூட்டு இயல்பான சேவை


4. கூட்டு இயல்பான சேவை

``கூட்டு இயல்பான சேவை அறியாமையை விரைந்து அகற்றுகின்றது’’
.
நாம் அனைவரும் ஒன்றிணைந்து இயல்பான சேவையில் ஈடுபட்டு வாழும் வாழ்க்கையே சிறந்த நெறியான வாழ்க்கையாக அமைகிறது. அனைவரும் ஒருங்கிணைந்து சேவை செய்வதால் அதாவது கூட்டு இயல்பான சேவை செய்வதால் இந்தச் சமுதாயம் பெருமளவு மாறுதல் அடைகிறது.

ஆற்றுகின்ற சேவையின் அளவு முக்கியமல்ல; அதனுடைய பலன் மட்டும் முக்கியம். தனித்தனி சேவையைவிடக் கூட்டு சேவையில் பலமடங்கு ஆற்றல் உள்ளது. சேவையின் புனிதத்தை இதில் எளிதில் உணர முடியும். சிறந்த கூட்டு இயல்பான சேவை செய்வதன் மூலம் நீ பாக்கியம் பெற்றவன் ஆகிறாய். பிறருக்குக்; கூட்டு இயல்பான சேவை செய்வதன் மூலம் நீ ஆண்டவனுக்கே தொண்டு செய்தவனாகிறாய்.

இவ்வுலகில்தான் ஒற்றுமையுடன் கூட்டு இயல்பான சேவை செய்திட முடியும். மறு உலகம் இல்லை. இதன் உண்மையைப் புரிந்து செயல்படுத்த வேண்டும். கூட்டுச் சேவை செய்திட வேண்டுமே தவிர வாதப் பிரிதிவாதங்களுக்கு இங்கே இடமில்லை. ஆகவே வீண் தர்க்கத்தால் மனத்தைக் குழப்பிக் கொள்ளக்கூடாது. தன்னை அறிய வேண்டுமெனில் ஆசைகளை வெற்றி கொள்ளாமல் உள்ளத்தில் உண்மை பிரகாசிக்காது. கூட்டுச் சேவையில் இந்த இக இச்சைகள் ஒவ்வொரு கணமும் தானாக ஒடுங்கும். ஒரு நிஜமான அனுபவம் ஏற்படும். அப்போது கூட்டு இயல்பான சேவையில் தீர்வை நாம் காணமுடியும்.

நாம் உண்மையான கூட்டு இயல்பான சேவையால் தெளிவு அடைய முடிகிறது. நம் உண்மைப் பொருளே பரம்பொருள். அதுதான் உண்மையான இயல்பு. அது நமக்கு உள்ளேயும், வெளியேயும் இருக்கிறது என்பதை உணர முடியும். கூட்டு இயல்பான சேவையில் வாழ்வோம், கூட்டு இயல்பான சேவை ஒன்றுதான் இன்ப நிலை. அது நம்மை ஒருங்கிணைத்து வழி நடத்திச் செல்லும்.

புல்லானாலும்கூட ஒன்று  சேர்த்துக் கயிறு ஆக்கினால் மதம் பிடித்த யானையையே அதனால் கட்டிவிட முடியும். அதுபோலக் கூட்டு இயல்பான சேவையில் அனைவரும் ஒன்றிணையும் போது உள்ளும், புறமும் பெரிய மாறுதலை ஏற்படுத்திவிட முடியும். நாம் அறநெறியுடன் ஒழுக முடியும். ஒழுக்கத்தோடு வாழ முடியும். கூட்டு இயல்பான சேவையில் புதிய சமுதாயத்தை அமையுங்கள்; வெறும் பேச்சால் அல்ல, புது அர்த்தங்களையும், ஊக்கமுள்ள, ஆக்கப்பூர்வமான பரிந்துரைகளையும் கற்பிக்க வேண்டும். பெயர், புகழ், பிறரை அடக்கியாளுதல் என்ற இந்த ஆசைகள் இல்லாமல் கூட்டு இயல்பான சேவை செய்வோம். காமம், பேராசை, கோபம் ஆகியவற்றிலிருந்து விடுபடுவோம். அப்போது உண்மை நம்மை அடையும்.

கர்மாவிலேயே அழிந்துப்போய் விடாதீர்கள். கூட்டு இயல்பான சேவையில் வெகுவாகக் கர்மாவைக் குறைக்கலாம். கூட்டுச் சேவையில் இது கர்மயோகமாக மாறும். கூட்டு இயல்பான சேவை செய்யும் வாய்ப்புக் கிடைத்திருப்பதற்காக நீ நன்றியுள்ள வனாக இரு; இதன்மூலம் தூய்மையும் பரிபூரணமும் உன்னை வந்தடையும்.

கூட்டு இயல்பான சேவையை வாழ்வின் தலையாய குறிக்கோளாகக் கொண்டு நம்மை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்ள வேண்டும். இதன் அர்ப்பணிப்பில் ஈடுபாடும், மகிழ்ச்சியும், எத்தகைய தியாகங்களையும் செய்யக்கூடிய திறனும் இருப்பது கூட்டு இயல்பான சேவையின் வெற்றியை எடைபோடுகின்ற அளவுகோல்களாக அமையும். கூட்டு இயல்பான சேவை செய்பவனே நடமாடும் தெய்வம். இதில் தேர்ச்சி பெறுவதே வாழ்வின் மிகச்சிறந்த சாதனையாகும். அதற்குப்பின் நீ தனி மனிதனில்லை. உலகம் முழுவதும் உனக்கு சொந்தம். இந்த உலகம் முழுவதுமே என்றென்றும் அத்தகைய மனிதனை விட்டு விலகி நிற்காது. இயல்பான சேவை செய்வதற்கான அன்புள்ள உடம்பே உயிருள்ள உடம்பு. அன்பு இல்லாதவர்களின் உடம்பு வெறும் எலும்பைத் தோலால் போர்த்திய உயிரற்ற உடம்பாகும். இயல்பான சேவை செய்வது என்பது மன மகிழ்ச்சியை ஈட்டுத் தருகின்ற நல் வாய்ப்பு. அதுபோதும்; மாசுமறுவற்ற தூய்மையும் இறை உணர்வும் கை கோர்த்துக் கொண்டு களிநடம் புரியும்.

நாம் அனைவரும் ஒருங்கிணைந்த கூட்டு இயல்பான சேவையில் நமது இலக்கைப் பற்றிய விளக்கம் எளிதில் அனைவருக்கும் கிடைக்க வழிவகைச் செய்கிறது.